அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த முக்கிய சந்திப்புக்காக பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கி நகரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சென்றடைந்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. 

ஜேர்மனி மற்றும் வியட்நாமில் இடம்பெற்ற பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி பரஸ்பரம் உரையாடியுள்ளனர். 

இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3 ஆவது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் இம் மாதம் திகதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை சென்றடைந்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

இதுதொடர்பில் டிரம்ப் கூறுகையில்,

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும், உலகக் கிண்ண கால்பந்து தொடரை சிறப்பாக நடத்திய ரஷ்யாவுக்கும், ஜனாதிபதி புட்டினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.