இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வதற்கு இலங்கையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய நிபுணர் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

இந்தியாவுடன் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொண்டால், இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூட்டு எதிரணியும், சில தொழிற்சங்கங்களும் எச்சரித்து வருகின்றன.

எனினும், யார் எதிர்த்தாலும், உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது, புதுடில்லியைக் கவலை கொள்ள வைத்துள்ளது. இந்த நிலையிலேயே இந்திய நிபுணர்களின் குழுவொன்று இலங்கை வந்து இந்த உடன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் 4ஆம் திகதி இந்த நிபுணர் குழு இலங்கையில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.