ஆசிய கிண்ணத் தொடரின் பாகிஸ்தானுக்கு  எதிரான நான்காவது லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதின.

  

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி, களத்தடுப்பை தேர்வு செய்தார். அவர் கணித்ததுபோல் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில்; விக்கெட்டை இழந்தனர். 

சர்ப்ராஸ் அகமது அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். குர்ரம் மன்சூர் 10 ஓட்டங்களை சேர்த்தார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

இதனையடுத்து 84 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கும் கடும் சவால் காத்திருந்தது. 

ஆரம்ப வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்தனர்.

 இவர்களின் விக்கெட்டை முகமது ஆமிர் கைப்பற்றினார். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி-ரெய்னா ஜோடி விளையாடியது. ரெய்னா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் கோலியுடன் யுவராஜ் இணைந்தார். யுவராஜ் தடுமாற்றமான ஆட்டத்தை தொடர கோலி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கோலி 49 ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை தவறவிட்டதோடு போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

யுவராஜ் சிங் 32 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பாகிஸ்தான் பந்து வீச்சில் முஹமட் ஆமிர் அதிரடியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.