இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஊடாக பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளில் இன்று 155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டம், ஹட்டன் போடைஸ் தோட்டம் மற்றும் பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்திலும் நடைபெற்றது.

இதன்போது, அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டம் போட்மோர் பிரிவில் 80 வீடுகளும், ஹட்டன் போடைஸ் தோட்டம் கோணகல பிரிவில்  50 வீடுகளும், பொகவந்தலாவ  லொய்னோன் தோட்டம் லின்போட் பிரிவில்  25 வீடுகளுக்குமான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டப்பட்டது.

இரண்டு படுக்கையறை, ஒரு சமயலறை, குளியலறை, மலசலக்கூட வசதி உட்பட மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் வசதிகளுடன் உருவாக்கப்படவுள்ள இந்த வீடுகள் முதற்கட்டமாக தீ விபத்து மண்சரிவு மற்றும் வீடுகள் இல்லாது வாழும் தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த வைபவத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட இந்திய உயர்தானிகராலயத்தின் அதிகாரி மஞ்சுநாத், மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.