(ஆர்.ராம்)

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதனால் நாட்டுக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி.பி.ளஸ் வரிச்லுகையில் எவ்விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்தார்.

மரண தண்டனைக்கு எதிரான பரப்புரையை ஐரோப்பிய ஒன்றியம் 42 ஆண்டுகளுக்கும் அதிகமான கலாமாக மேற்கொண்டு வருகின்றது. அவ் அறிக்கையில் தற்போது போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. முதற் கட்டமாக அமைச்சரவை அனுதியை பெற்று குற்றவாளிகள் தொடர்பான பட்டியலை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இச் செயற்பாடானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்புரைக்கு எதிரானதாக காணப்படுவதனால் அந்த அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு தடையாக அமையும் என இராஜதந்திர தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண இவ் விடயம் தொடர்பாக கேசரிக்கு தெரிவிக்கையில்,

இந் நிலையில் சட்டங்களுக்கு அமைவாக மரண தண்டனை சட்டம் உள்ளது. இருப்பினும் சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு அதிகமாக அந்தச சட்டம் நடைமுறையில் அமுலாக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில் தற்போது அச் சட்டத்தை அமுலாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் இலங்கைக்கு கிடைக்கும் ஜி.எஸ்.பிளஸ் சலுகையில் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை என்றார்.