ரஷ்யாவின் செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்தை 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட பெல்ஜியம், வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் பெல்ஜியம் அதி சிறந்த பெறுபேறை பதிவு செய்தது.

இப் போட்டியின் ஆரம்பத்தில் தோமஸ் மியூனியரும் பிற்பகுதியில் அணித் தலைவர் ஈடன் ஹஸார்டும் கோல்களைப் போட்டு தமது அணியை வெற்றிபெறச் செய்து இங்கிலாந்தை நான்காம் இடத்துக்கு பின்தள்ளினர்.

ஜீ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை 1 க்கு 0 என வெற்றிகொண்ட பெல்ஜியம் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் ஒரு கோல் கூடுதலாக போட்டு இரண்டாவது தடவையாக இங்கிலாந்தை உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றிகொண்டு லீக் வெற்றி வெறுமனே வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

போட்டியின் நான்காவது நிமிடத்தில் நாசர் செட்லி பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக முன்னோக்கி நகர்ந்த தோமஸ் மியூனியர் வலதுகாலால் தட்டி பெல்ஜியத்தின் முதலாவது கோலைப் போட்டார்.

இரண்டு போட்டிகளில் இரண்டு மஞ்சள் அட்டை எச்சரிக்கைகள் காரணமாக அரை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த தோமஸ் மியூனியருக்கு இந்தக் கோல் பெரும் மனமகிழ்வை கொடுத்தது.

ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டியில் பெல்ஜியம் சார்பாக கோல் போட்ட பத்தாவது வீரர் மியூனியர் ஆவார். இதன் மூலம் 1982இல் பிரான்ஸ் சார்பாகவும் 2006இல் இத்தாலி சார்பாகவும் தலா பத்து வெவ்வேறு வீரர்கள் கொல்கள் போட்ட சாதனையை பெல்ஜியம் இம்முறை சமப்படுத்தியது.

இந்தக் கோலைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை பெல்ஜியம் தோற்றுவித்தபோதிலும் இங்கிலாந்தின் ரூபென் லொவ்டஸ் சீக், எரிக் டயர் ஆகிய இருவரும் அவற்றை முறியடித்தவண்ணம் இருந்தனர்.

இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பெல்ஜியம் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னர் இங்கிலாந்து வித்தியாசமான அணியாக தோன்றி சில கோல்போடும் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்க்கஸ் ரஷ்போர்ட் பரிமாறிய பந்தை பெல்ஜிய கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸைக் கடந்து கோலினுள் செல்லும் வகையில் எரிக் டயர் தனது வலது காலால் தட்டிவிட்டார்.

ஆனால் கோலினுள்ளே செல்லவிருந்த பந்தை நோக்கி மிக வேகமாக ஓடிய டயரின் டொட்டன்ஹாம் அணி சகாவும் எதிரணி வீரருமான டொபி ஆல்டர்வெய்ரெல்ட கடும் முயற்சியுடன் காலால் உதைத்து பந்தை வெளியேற்றினார்.

சில நிமிடங்கள் கழித்து தோமஸ் மியூனியரின் முயற்சியை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட் தடுத்து நிறுத்தி இங்கிலாந்துக்கு உற்சாகம் ஊட்டினார். ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்றயன் மத்திய களத்தில் இருந்து பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக ஓடிய பெல்ஜியம் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் மிக இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தினால் மீண்டெழ முடியாமல் போக வெண்கலப் பதக்கம் தங்களுக்கு கிடைப்பதை பெல்ஜிய வீரர்கள் உறுதிசெய்துகொண்டனர்.

போட்டி முடிவில் உடன் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து பெல்ஜிய வீரர்களுக்கு பீபா தலைவர் ஜியான்னி இன்பன்டினோ வெண்கலப் பதக்கங்களை சூட்டினார்.

ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டிகளில் பெல்ஜியம் சார்பாக 4 கோல்களைப் போட்டிருந்த ரொமேலு லூக்காக்கு போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் மேர்ட்டென்ஸுக்கு வாய்ப்பு வழங்கியதால் ஹெரி கேனுக்கு தங்கப் பாதணி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் இறுதிப் போட்டியில் 3 கோல்களைப் போட்டால் தங்கப் பாதணி கைமாறுவதற்கு வாய்ப்புள்ளது.