(லியோ நிரோஷ தர்ஷன்)

நீர்முழ்கி கப்பலிகளின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு கடல் பாதுபாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க தென் பிராந்திய பாதுகாப்பு கட்டளை தலைமையகம் அங்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்து - பசுபிக் வலயம் என அமெரிக்க அறிமுகப்படுத்தியதை சீனா தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டது. அதாவது இந்த வலயத்தில் தமது அதிகாரத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகவே சீனா இதனை கருதுகின்றது. அவ்வாறு எதுவும் இல்லை. எவ்வாறாயினும் சீனா பல்வேறு உபாயங்களை பயன்படுத்துகின்றது. அந்த உபாய திட்டங்களுக்குள் இலங்கையும் உள்ளது. 

சீனாவுடனான ஒப்பந்தத்தில் இந்த விடயம் மிக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை சீன அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. சுங்கம் , உள்நாட்டு வெளிநாட்டு கட்டுப்பாடு மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களும் இலங்கை வசமே காணப்படுகின்றது. அதே போன்று காலியில் உள்ள கடற்படை கட்டளை தலைமையகம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மாற்றப்படவுள்ளது. 

மறுப்புறம் நீர்மூழ்கி கப்பல்களினால் ஏற்பட கூடிய அச்சுறுத்தல் குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக கடற்படை விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் தேவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்க ரோந்து படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பு தளமாக பயன்படுத்த சீனாவிற்கு சந்தர்ப்பம் கிடையாது.

மறுப்புறம் மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க உத்தேசித்துள்ளளோம். எனவே சீனாவிற்கு  தான் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என இனி யாராலும் குற்றம் சாட்ட முடியாது.  எனவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தின் ஊடாக கூடிய பொருளாதார நிறைவு தன்மையை அடைய முடியும் என தெரிவித்தார்.