(எம்.எப்.எம்.பஸீர்)

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் குறித்து சர்ச்­சைக்­கு­ரிய கருத்து வெளியிட்ட விஜ­ய­கலா மகேஸ்­வரன் தமிழில் ஆற்­றிய உரையை சிங்­கள மொழியில் மொழி பெயர்த்து,  திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கைய­ளிக்கு­ மாறு கொழும்பு பிர­தான நீதிவான் ரங்க திஸா ­நா­யக்க நேற்று அரசகரும மொழிகள் திணைக்க­ளத்தின் ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ர­விட்டார். 

இது தொடர்பில்  நேற்று திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வினர், இடை­யீட்டு மனு ஊடாக  கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில், விஜ­ய­கலா தொடர்­பான வழக்­கினை விசா­ர­ணைக்கு எடுத்­தனர். இதன்­போது அவர்கள், விஜ­ய­கலா மகேஸ்­வரன் யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில்  ஆற்­றிய உரையின் செம்மைப்படுத்­தப்­ப­டாத  பதி­வுகள் இரண்டை நீதி­மன்றில் கைய­ளித்­தனர். 

நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய பெற்ற உரைப் பதி­வு­க­ளையே அவர்கள் இவ்­வாறு நீதி­மன்­றிடம் கைய­ளித்­தனர். இவ்­வாறு நீதி­மன்­றிடம் கைய­ளித்து, அதனை  அரச கரும மொழிகள் திணைக்­களம் ஊடாக மொழி பெயர்ப்புச் செய்ய திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வினர் நீதி­மன்றைக் கோரினர்.

இதனைக் கருத்தில் கொண்ட நீதிவான்,  ஒலி, ஒளி வடிவில் உள்ள விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் தமிழ் மொழி மூல உரையை அப்­ப­டியே எந்த வித்­தி­யா­சமும் இல்­லாமல் எழுத்­து­ரு­வுக்கு மாற்றி அவ்­வாறு எழுத்­து­­ரு­வுக்கு மாற்­றப்­பட்ட தமிழ்  பிர­தியை சிங்­கள மொழிக்கு நேர­டி­யாக மொழி­மாற்றம் செய்து திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கைய­ளிக்­கு­மாறு  அரச கரும மொழிகள் திணைக்­க­ளத்தின் அரச மொழிகள் ஆணை­யா­ள­ருக்கு உத்­தரவிட்டார்.

இந் நிலையில் நேற்று இது குறித்து மேலும் தக­வல்­களை நீதி­வா­னிடம் வெளிப்ப­டுத்­திய விசா­ர­ணை­யா­ளர்­க­ளான திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு, விஜ­ய­க­லாவின் உரை தொடர்பில்  முறைப்­பா­ட­ளித்த அனை­வ­ரி­னதும் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும்,  அவர் உரை­யாற்றும் போது மேடையில் இருந்த பிர­மு­கர்­களின் வாக்கு மூலங்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்கை  இடம்­பெ­று­வ­தா­க வும்  அறி­வித்­தனர்.

அதன்­படி உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சரின் வாக்கு மூலத்தை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் நீதிவானுக்கு அறிவித்தனர்.