பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது குண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய தீவிரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே, மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

பலுசிஸ்தான் மாகாணம் மஸ்தாங்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவாமி கட்சியின் வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உட்பட  33 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட போது மஸ்தாங் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்தது. இந்த தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர், 

அவர்களில் 15 பேர் வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில்,  மஸ்தாங் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.