ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக பிளவடையாத நாட்டிற்குள் நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவிடம் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை  கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் சம்பந்தன் தெரிவத்துள்ளதாவது,

புதிய அரசியல் யாப்பானது மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்படவேண்டும். அத்துடன் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியமாகும்.

மேலும் பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கிறோம். நாட்டில் நீண்டகால நிலவி வரும் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காண முடியும். 

இந் நிலையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து  தாமே நிர்ணயித்து  முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்களையும் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதனூடாக வெளிநாட்டு முதலீடுகளினால் எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும்  அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய வெளியுறவுச் செயலாளருடனா இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங், இந்திய தூதரகத்தின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.