இன்றைய நிலையில் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள், பணிக்கு செல்பவர்கள் அல்லது இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் என அனைவரும் அவர்களின் காதுகளில் இயர் போன் நிச்சயமாக இருக்கும். இருக்கிறது. 

இன்று யாரும் பயணத்தின் போது செல்போனை பேசக்கூடாது என்றால் கேட்பதில்லை. அதற்கு தான் நாங்கள் இயர் போனை மாட்டிக்கொண்டு தானே பேசுகிறோம் என்பார்கள். அதே போல் கொழும்பிற்கு புறநகரிலிருந்து புகையிரதம் அல்லது பஸ் மூலமாக வருபவர்கள் ,பயணத்தைத் தொடங்கியவுடன் காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு தனக்கு விருப்பமானவர்களுடன் பேசத் தொடங்குகிறார்கள் அல்லது பாடல்களை கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். 

ஆனால் இதன் பின்விளைவு குறித்து யோசிப்பதில்லை. எடுத்துக் கூறினால் அலட்சியப்படுத்துவார்கள்.

ஆனால் இவர்களுக்கு எவ்வளவு நேரம் இயர் போனை கேட்கலாம். தொடர்ந்து கேட்பதால் ஏற்படும் மருத்துவரீதியிலான பாதிப்புகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்.

இயர் போனை மாட்டிக் கொண்டு இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை தான் அதிகப்பட்சமாக பேசலாம். பாடல்களை கேட்கலாம். இந்த எல்லையைக் கடந்தால் காதுகளில் இருக்கும் கார்டிலெஜ் எனப்படும் மென்மையான எலும்பை இந்த இயர் போனின் முனை அழுத்தத் தொடங்கும்.

 அத்துடன் தொடர்ந்து ஒலி அலைவரிசை வெவ்வேறு ஒலியளவில் காதுகளை அடைவதால் காதில் ட்ரம் எனப்படும் சவ்வு கிழிவதற்கோ அல்லது தளர்வடைவதற்கோ காரணமாகிவிடும். 

அத்துடன் அங்குள்ள மென்மையான பகுதிகளில் வீக்கங்கள், கொப்புளங்கள் போன்றவையும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் குறைவான நேரத்திற்கு இயர் போனை பயன்படுத்துங்கள். உங்கள் காதுகளை ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் பயன்படும் வகையில் திட்டமிடுங்கள்.

டொக்டர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.