இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் கோஹலே  இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது பிரதமரும் இந்திய வெளிவிவகார செயலாளரும் இந்திய மீனவர்கள் விவகாரம் மற்றும் இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

வெளிவிவகார செயலாளருடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்திய நிதியுதவி திட்டங்களுடன் முன்னெடுக்கப்படும்  அபிவிருத்தி திட்டங்கள் இந்த வருடம் ஆரம்பமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உத்தேச பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக மாறும் எமது எண்ணத்திற்கு வலுவான பிராந்திய உறவுகள் முக்கியமானவை  நான் இன்று இந்தியாவின் வெளிவிவகார செயலாளரை சந்தித்துள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களிற்காக இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம் மற்றும் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்தும் ஆராயப்பட்டது இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்  என இலங்கை உறுதியளித்துள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.