மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 33ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கி வருகின்றார்.

 அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் போசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மனித புதை குழி அகழ்வு பணிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 இதுவரை குறித்த வளாகத்தின் மையப்பகுதி மற்றும் நுழைவு பகுதிகளில் மாத்திரம் அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்த போதும் தற்போது நுழைவு பகுதியின் முன் காணப்படும்  பகுதியிலும் அகழ்வுபணிகள் இடம் பெற்றது.

 அகலப்படுத்தல் பணிகள் இடம் பெற்ற போது மேலும் சந்தேசத்துக்குறிய மனித எச்சங்கள் மற்றும் மண்டையோடுகள் மீட்கப்படுள்ளது.

 தற்போது குறித்த மனித புதைகுழியில் ஒரு பகுதி அகலப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிலையில் இன்று 33 ஆவது தடவையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், இது வரை 27 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் குறித்த புதைகுழியில் மோதிர வடிவிலான வட்ட வடிவானா ஒரு தடய பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தடயப் பொருளை அடையாளப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருவதாகவும் எனவே குறித்த அகழ்வு பணி நிறைவடையும் வரை எவ்வித உலோகம் எனக்கூற முடியாது எனவும்   தெரிவித்தார் .