20 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில்  இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக இந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தானின் பந்து வீச்சும் இடையில் நடைபெறும் போராட்டமாக இப்போட்டி அமைய உள்ளது.

ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.

தனது தொடக்க ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்ட இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினால் இறுதிசுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். 

இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை ஓட்டம் குவிப்பது சுலபமான விடயமல்ல. எனவே இரு அணிகளுக்கும் இதுவவொரு சவாலான   விடயமாகும். 

 

ரோகித் சர்மா கருத்து

பாகிஸ்தான் அணியின் பிரதான ஆயுதமே வேகப்பந்து வீச்சு தான். அதுவும் ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் போது, அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். எனவே இந்திய துடுப்பாட்ட வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

 ‘பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் வலுவானது. ஆனால் நாங்கள் எங்களது பலத்துக்கு ஏற்ப தயார்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது பலம் துடுப்பாட்டம் தான். ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அணியும் ஏதாவது ஒன்றில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவர்களிடம் சிறந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதே போல் நம்மிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்’ என்றார்.

பாகிஸ்தான் வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவத்தோடு வந்து இருக்கிறார்கள். பெரிய போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வியடைவதும் உண்டு. அந்த மோசமான நிலையை மாற்ற இன்றைய போட்டியில் முயற்சிப்பார்கள். 

சூதாட்டத்தில் சிக்கி 5 ஆண்டு கால தடைக்கு பிறகு அணிக்குள் நுழைந்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அப்ரிடி பேட்டி

பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா–பாகிஸ்தான் போட்டி என்றாலே பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கும், இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். 

இங்குள்ள சூழலில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எங்களிடம் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்கள். 

இந்திய துடுப்பாட்ட வீரர்களை சீக்கிரமே வெளியேற்றி முதல் 6 ஓவர்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிப்பார்கள். இந்திய அணி துடுப்பாட்ட வரிசையில் வலிமையானது என்பதை அறிவேன். 

ஆனால் நாங்கள் வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு நல்லதாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இரு முக்கிய அணிகள் மோதும் இந்த ஆட்டத்தை காண உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (அணித் தலைவர்) ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, நெஹரா.

பாகிஸ்தான்: முகமது ஹபீஸ், ஷர்ஜீல் கான், உமர் அக்மல், சோயிப் மாலிக், குர்ரம் மன்சூர், சர்ப்ராஸ் அகமது, அப்ரிடி (அணித் தலைவர்), முகமது நவாஸ், முகமது இர்பான், முகமது ஆமீர், அன்வர் அலி அல்லது வஹாப் ரியாஸ்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை எமது இணையத்தளத்தில் காணலாம்

இதுவரை...

இந்தியா – பாகிஸ்தான்கள் அணிகள் இதுவரை 6 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4–ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சகல விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதியாக பாகிஸ்தானை 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.