குருநாகல் - மாஹோ பகுதியில், 25 வயது தாயும் 9 மாத மகளும், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, முச்சக்கர வண்டி சாரதியொருவர், தான் முச்சக்கர வண்டியில்  அழைத்துச்சென்று வீட்டில் விடுவதாகக் கூறி, அழைத்துச் சென்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை, மீண்டும் வான் ஒன்றில் பலவந்தமாக ஏற்றியுள்ள குழுவொன்று, வவுனியாவுக்குக் கடத்திச் சென்றுள்ளது.

இதன்போது குழந்தை தொடர்ச்சியாக அழுதமையால், பூந்தோட்டம் பகுதியில் தாயையும் பிள்ளையையும் இறக்கிவிட்டு, வான் சென்றுள்ளது.

இதனையடுத்து, தாயையும் பிள்ளையையும் மீட்டுள்ள அந்தப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு நடந்த விவரத்தைக் கூறியதை அடுத்து, வவுனியா பொலிஸார், தாயையும் பிள்ளையையும் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, விசாரணை நடத்திய போதே, சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸாரால் குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குருநாகல் பொலிஸார், நேற்று(12-07-2018)  வவுனியாவுக்கு வருகைதந்து, தாயையும் பிள்ளையையும் குருநாகலுக்கு அழைத்துசென்றதுடன், மேலதிக விசாரணைகளை, குருநாகல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.