(எம்.சி.நஜிமுதீன்)

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளின் பின்னால் அரசாங்கம் உள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வாரம் பெற்றோல் விலை அதிகரிப்பட்டபோதும் மறுநாள் ஜனாதிபதி அந்த விலை அதிகரிப்பை தடுத்தார். எனினும் அமைச்சரவையில் அரசாங்கம் எதிர்பார்த்ததை அடைந்து கொண்டது. எனவே ஜனாதிபதியினால் நாட்டை நிர்வகிக்க முடியாது. அவரை விட அரசாங்கம் பலமான நிலையில் உள்ளது. 

மேலும் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பினால் அரசாங்கத்திற்கு நாற்பது கோடிக்கும் அதிகாமான இலாபம் கிடைக்கிறது. இவ்வாறு வருமானம் ஈட்டுகின்றபோதும் நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது. 

அத்துடன் தற்போது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனையில் அதிர்ஷ்ட இலாபம் வெற்றிக்கொள்ளப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அது உண்மைதான் காரணம் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அத்துடன் நாட்டில் தற்போது அதிகரித்துள்ள பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.