இங்கிலாந்தை கட்டுப்படுத்தி முதன் முறைாயக இறுதிப் போட்டியில் கால்பதித்த குரோஷியா

Published By: Vishnu

12 Jul, 2018 | 08:18 AM
image

இங்கிலாந்துக்கு எதிராக மொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி ஈட்டிய குரோஷியா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதல் தடவையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது.

மேலதிக நேரத்தின் 109 ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்சூக்கிக் போட்ட கோல் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தின் இறுதிப் போட்டி கனவை சிதைத்தது.

மேலும் ரஷ்யா 2018 பிபா கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் மூன்றாவது தடவையாக மேலதிக நேரத்துக்கு சென்று குரோஷியா வெற்றிபெற்றமை விசேட அம்சமாகும்.

1998 இல் முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் தனி நாடாக விளையாடிய குரோஷியா, ஐந்தாவது முயற்சியில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. 

இந்த வெற்றியை அடுத்து லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸை குரோஷியா எதிர்த்தாடவுள்ளது.

லீக் சுற்றில் மெசியைக் கட்டுப்படுத்தி ஆர்ஜன்டீனாவை வெற்றிகொண்ட குரோஷியா, இரண்டாவது அரை இறுதியில் ஹெரி கேனைக் குறிவைத்து அவரைக் கட்டுப்படுத்தி இங்கிலாந்தை வெற்றிகொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

போட்டியின் ஆரம்பித்திலேயே போடப்பட்ட கோலின் மூலம் உற்சாகம் அடைந்த இங்கிலாந்து மிக நேர்த்தியாகவும் புத்தி சாதுரியமாகவும் விளையாடி இடைவேளை வரை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் குரோஷியா எல்லையை ஆக்கிரமித்த இங்கிலாந்துக்கு பெனல்டி வில்வளைவு முன்பாக ப்றீ கிக் ஒன்று கிடைத்தது.

போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர்களைக் கொண்ட 'தடுப்பு சுவருக்கு' (டிபென்சிவ் வோல்)  மேலாக கீரன் ட்ரிப்பயர் உதைத்த பந்து (ப்றீ கிக்) கோல்காப்பாளர் டெனியல் சுபாசிக்கின் இடது புறமாக கோலினுள்ளே செல்ல இங்கிலாந்து வீரர்களும் இரசிகர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் குரோஷிய வீரர் அன்டே ரெபிக், பெனல்டி எல்லையிலிருந்து உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் இலகுவாக பற்றிப் பிடித்தார்.

இங்கிலாந்து போட்ட கோலினால் பதற்றம் அடைந்த குரோஷிய வீரர்கள் பந்துக்கு பதில் ஆட்களை இலக்குவைத்து விளையாடினர். ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேனின் நெஞ்சுப் பகுதியில் குரோஷிய வீரர் டிஜான் லவ்ரென் தாக்கி வீழ்த்தியபோதிலும் மத்தியஸ்தரின் வாய்மூல எச்சரிக்கையுடன் அவர் தப்பினார்.

27ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஏஷ்லி யங் உதைத்த பந்தை குரோஷிய கோல்காப்பாளர் டெனியல் சுபாசிக் கடும் பிரயாசையுடன் உயரே பாய்ந்து திசை திருப்பினார்.

ஆட்டம் 30 ஆவது நிமிடத்தைத் தொட்டபோது ஹெரி கேனுக்கு கோல் போடுவதற்கு இலகுவான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் கோலுக்கு மிக அருகாமையிலிருந்து அவர் உதைத்த பந்து வலது கோல் கம்பத்தில் பட்டு முன்னோக்கி வந்தது. அதேவேளை கேன் ஓவ்சைட் நிலையிலிருந்ததாக உதவி மத்திஸ்தர் சமிக்ஞை கொடுக்க பிரதான மத்தியஸ்தர் தனது விசில் மூலம் அதனை அங்கீரித்தார்.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த குரோஷியா எவ்வளவோ முயன்றும் இடைவேளை வரை அதன் முயற்சிகள் சாதக பலனைத் தரவில்லை.

இடைவேளையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சொற்ப நேரத்தில் குரோஷிய வீரர் மண்ட்சூக்கிக், இங்கிலாநது வீரர் வோக்கர் ஆகியோர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளாகினர்.

குரோஷியா தொடர்ந்து எதிர்த்தாடலில் இறங்கி 68 ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தியது. வலது எல்லையிலிருந்து சிமோ விர்சாஜோ உயர்வாக பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு இடது நுணிக்காலால் தட்டிய ஐவன் பெரிசிக் கோல் நிலையை சமப்படுத்தினார். இங்கிலாந்து பின்கள வீரர் கய்ல் வோக்கர் அப் பந்தை தலையால் தட்டி திசை திருப்ப முற்பட்டபோதிலும் ஐவன் பெரிசிக் தனது இடது காலை நீட்டி கோல் போட்ட விதம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டதுடன் தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை சாதமாக்கிக்கொண்ட குரோஷிய வீரர்கள் எதிர்த்தாடும் உத்தியைக் கையாண்டு கோல் போடுவதற்கு முயற்சித்தனர். ஆனால் மூன்று சந்தர்ப்பங்களில் அவ்வணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது. 

இப் போட்டியில் ஹெரி கேனினால் கோல் போடும் ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போனதுடன் உபாதையீடு நேரத்தில் அவர் தலையால் முட்டிய பந்து இலக்கு தவறிப் போனது.

90 நிமிடங்கள் நிறைவின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தில் இங்கிலாந்து திறமையாக விளையாடியபோதிலும் கோல் போட முடியாமல் போனது. 

போட்டியின் 105 ஆவது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பொன்றைத் தவறவிட்ட மரியோ மாண்ட்சூக்கிக், மேலதி நேரத்தின் இரண்டாவது பகுதியில் (109ஆவது நிமிடம்) கோல் போட கிடைத்த வாய்ப்பை சாதமாகப் பயன்படுத்தி குரோஷியாவை முன்னிலையில் இட்டார்.

இங்கிலாந்து வீரர் ஒருவரால் உதைக்கப்பட்ட பந்து மேலெழுந்தபோது அதனை ஐவன் பெரிசிக் தனது தலையால் பின்னோக்கி தட்ட பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த மாண்சூக்கிக்கு 6 யார் கட்டத்தின் விளிம்பிலிருந்து இடதுகாலால் இலாகவகமாக கோல் போட்டு முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தைப் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

கடைசி நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஒரு ப்றி கிக் கிடைத்த போதிலும் அதனால் குரோஷியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பைத் தடுக்க முடியாமல் போனது.

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35