நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக பா.ஜ க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் வேண்டுகோள். விடுத்துள்ளார் ..

இது தொடர்பாக சென்னையில் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘ தொண்டர்கள், நிர்வாகிகள் என பதினைந்தாயிரம் பேர் கூடி மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டி இருக்கிறோம். எனவே மற்ற தலைவர்களை அனைவரும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

மற்ற கட்சிகளின் நடவடிக்கையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு வரும் ஒரு தலைவரை ‘போங்க’ என்கிறார்கள். இது விருந்தோம்பல் ஆகுமா? நாங்கள் அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டோம். 

தமிழகத்தில் ஊழல் நிறைந்திருக்கிறது என்று அமித்ஷா சொன்னதை திருநாவுக்கரசர் போன்றவர்கள் வேறு வகையில் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை நேர்மையான நிர்வாகம் தமிழகத்தில் வரவேண்டும். 

50 வருடமாக தமிழகத்தில் நேர்மையான நிர்வாகம் இல்லை என்பதுதான் நமக்கு கவலையாக இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக பா.ஜனதா தலைவர்கள் யாரும் சிறை சென்றது கிடையாது. இதில் கேலி-கிண்டல் செய்ய என்ன இருக்கிறது?

.தி.மு.க.வினர் மற்ற கட்சிகளை எதிர்த்து இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு எப்படி அனுசரணையாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. மற்ற கட்சி தலைவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குகிறார்கள் 

மத்திய அரசு நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் சில அதிகாரிகளால் தவறு நடந்திருக்கிறது. 

எந்த விதத்திலும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.

நீதிமன்ற உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் பாதிப்பு அடையாமல் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.’ என்றார்.