தெற்காசிய நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளுக்கு முன் பிறக்கும் அல்லது குறைமாத பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளில் Neonatal Sepsis என்ற பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை சந்திக்கும் குழந்தைகள் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

குறைமாதங்களில் அதிலும் 28 நாட்களுக்கு முன்பாக பிறக்கும் குழந்தைகளை பச்சிளங்குழந்தைகளுக்கான விசேட தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படும். இதன் போது அந்த பச்சிளங்குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றல் முழுமையாக வளர்ச்சியடையாத காரணங்களால் நோயுற்று மரணத்தை எதிர்கொள்கிறது. 

இதற்கு Escherichia Coli, Listeria மற்றும் Streptococcus போன்ற பாக்றீரியாக்களின் தாக்கங்களே காரணம் என அறியப்படுகிறது.  அதே வேளை இத்தகைய பாதிப்புகள் ஒவ்வொரு குழந்தையும் தாயின் வயிற்றில் கருவுற்றிருக்கும் போது ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே பெண்கள் கருவுற்றிருக்கும் போது தவறாமல் வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள். 

இது போன்ற பாதிப்பிற்கு ஆளாகும் என அவதானிக்கப்படுகின்ற குழந்தைகளுக்கு கருவில் இருக்கும் போதே, தாய்மார்களுக்கு உரிய சிகிச்சையையும் சத்தான உணவின் அவசியத்தையும் உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குரிய சிகிச்சையை பெறாவிட்டால் அந்த குழந்தைக்கு ஆயுள் முழுவதும் ஏதேனும் ஆரோக்கிய பாதிப்புகள் தொடரும்.

பச்சிளங்குழந்தைகளின் உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றம் உண்டாகுதல், மூச்சு திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமப்படுதல், வயிற்று போக்கு , இரத்த சர்க்கரையின் அளவு குறைதல், உடலியக்கம் குறைதல், வாந்தி, கண்களின் நிறம் மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதற்கான சிகிச்சையின் போது ஒரு சில குழந்தைகளுக்கு Septic Shock எனப்படும் இரத்த அழுத்தம் குறைந்துவிடக்கூடிய அபாயமும் உண்டு. 

இதனை தடுக்கவேண்டும் என்றால் பெண்கள், கருவுற்றிருக்கும் காலங்களில் வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சத்தான சரிசமவிகித உணவை உட்கொள்ள வேண்டும். இத்தகைய சிக்கல் வரக்கூடாது என்பதற்காக வைத்தியர்கள் அறிவுறுத்தும் சில மருந்துகளையும் உட்கொள்வதோடு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.

டொக்டர்  ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.