சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க அணியின் சகல துறை ஆட்டக்காரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் 34 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரரான வில்லியர்ஸ் இதுவரை 114 டேஸ்ட் போட்டிகளில் விளையாடி 8765 ஓட்டங்களையும் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9577 ஓட்டங்களையும் 78 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 1672 ஓட்டங்களுமாக மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன் இவர் கடந்த மே மாதம் ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்து தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந் நிலையில் வில்லியர்ஸ் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? விளையாட மாட்டாரா? என்ற கேள்விவிக்கு தற்போது அவர் மெளனம் கலைத்து பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதேபோல் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்ட நாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே. 

தற்போது பல்வேறு இடங்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் இந்த அழைப்புகள் ஏற்படுத்தும் ஆச்சரியம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ரோயல் செலன்ஞ்சர்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் " நீங்கள் காத்திருக்கும் அந்தச் செய்தி வந்து விட்டது, வில்லியர்ஸ் எங்கும் செல்லவில்லை. 360 பாகை மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறார் என்றும் பதிவிட்டுள்ளது.