தாய்லாந்தில் வெள்ளம் நிரம்பிய குகையில் கடந்த இரு வாரங்களிற்கு மேல் சிக்குண்டிருந்த 12 சிறுவர்களும் உலக நாடுகள் பல இணைந்து மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று எட்டுப்பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று எஞ்சிய நான்கு சிறுவர்களையும் பயிற்றுவிப்பாளரையும் மீட்பு பணியாளர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஒருவாரகாலமாக இவர்களிற்கு உதவியாக உள்ளே தங்கியிருந்த 4 நிபுணர்களையும் மீட்பு பணியாளர்கள் வெளியே அழைத்துவந்துள்ளனர்.

கடந்த 23 ம் திகதி குகையை ஆராய்ந்துகொண்டிருந்தவேளை ஏற்பட்ட கடும் மழைவெள்ளத்தை தொடர்ந்து வைல்ட்போர் கழகத்தை சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்றுவிப்பாளருடன் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அதன் பின்னர் இவர்கள் உயிருடன் இருப்பது 2 ம் திகதி தெரியவந்ததை தொடர்ந்து மழைகாலத்திற்கு முன்னர் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்திய மீட்புகுழுக்கள் அவர்கள் அனைவரையும் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.