(எம்.மனோசித்ரா)

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தின் போது தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொதுசெயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகியிருந்தாலும் தாம் சு.க.வின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதில்லை என ஒரு சாரர் தெரிவித்து வருகின்றனர். சிலர் பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்கின்றனர். சிலர் இரண்டுமற்ற நிலையில் உள்ளனர்.

எவ்வாறிருப்பினும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனும் போது அதற்கென முறையான கொள்கைகளும் சட்டதிட்டங்களும் உள்ளது. சுதந்திரகட்சியிருந்து விலகப்போவதில்லை என அவர்கள் அறிவித்திருந்தாலும் கட்சி கூட்டங்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றனர். சிலர் எதிரணியின் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் உத்தியோகபூர்வ முடிவினை அறிவிக்க வேண்டும். 

இந் நிலையில் இவர்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தின்போது முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.