(எம்.எப்.எம்.பஸீர்)
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு தனித்தனியாக முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
உண்மையை கண்டறியும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த இந்த முறைப்பாடுகளை பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று பதிவு செய்தார். அத்துடன் வடக்கில் ஜூலை 5 ஆம் திகதி இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு நிகழ்வுகள் தொடர்பிலும் இதன்போது மற்றொரு முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வண்ணமும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த விடயத்தை வரவேற்று கருத்துக்களை வெளியிட்டு இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. வெளிநாடு செல்லவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தெரிய வந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், ஏற்கனவே அவர் தொடர்பில் தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் அதற்காக அவதானம் செலுத்துமாறும் சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.
நேற்று பிற்பகல் 2.45 அளவில் பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற சட்டத்தரணி தொலவத்த தலைமையிலான் குழுவினர், முதலில் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முறையிட்டனர். கடந்த 2018.07.05 ஆம் திகதி விக்கினேஸ்வரன் அறிக்கையொன்றினை விடுத்துள்ளதாகவும் அதில், புலிகள் காலத்தில் வடக்கில் மக்கள் பாதுகாப்பாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அதனூடாக விஜயகலா மகேஸ்வரன் ஏற்கனவே வெளியிட்ட கருத்துக்களையும் அவர் ஆமோதித்துள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நடவடிக்கையானது அரசியல் யாப்பை மீறும் செயல் என சுட்டிக்காட்டியுள்ள முறைப்பாட்டாளர், தண்டனை சட்ட கோவையின் 114, 115 ஆம் அத்தியாயங்களின் கீழ் விக்கினேஸ்வரன் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாகவும், அவரின் கூற்றானது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் பிரகாரமும் இனங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் உண்மையை கண்டறியும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2 ஆம் முறைப்பாடு விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.க்கு எதிராக செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 2018.07.07. ஆம் திகதி யாழ். பிராந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியை மையப்படுத்தி தனியார் தொலைக்காட்சிகள் இரண்டு ஒளிபரப்பிய செய்தியை ஆதாரம் காட்டி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது மனதில் உள்ள உறுத்தலை வெளிப்படுத்த தனக்கு உரிமை உள்ளதாகவும், யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் பிரபாகரன் தனது மண்ணை மீட்க போராடிய தலைவர் எனவும், ஹிட்லருடன் பிரபாகரனை ஒப்பிட முடியாது எனவும் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார். இதுவும் தண்டனை சட்ட கோவையின் 114, 115 ஆம் அத்தியாயங்களின் கீழ் இவரும் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாகவும், அவரின் கூற்றானது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் பிரகாரமும் இனங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் தண்டனைக்குரிய குற்றமாகும். என அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனும் விஜயகலா எம்.பி.யின் உரையை ஆமோதித்து வெளியிட்ட அறிக்கையை மையப்படுத்தி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கு புறம்பாகவே வடக்கில் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற கரும்புலிகள் தின நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM