இன்றைய நிலையில் தெற்காசிய நாடுகளில்  குடல் அழற்சி நோய் மற்றும் அஜீரன நோய்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

சந்தையில் தற்போதுவிற்பனையில் இருக்கும் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களையோ அல்லது பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளையும், குளிர்பானங்களையும் நாம் சாப்பிடுவதாலும், அருந்துவதாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு குடல் அழற்சி நோய் ஏற்படுகிறது. 

தெற்காசிய நாடுகளில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறுகளுக்கு ஆளாகி குடல் அடைப்பு நோய் மற்றும் குடல் பாதிப்பிற்கு ஆளாகிறோம்.

இத்தகைய உணவுப்பொருள்களில் எமக்கும் அறியாமலேயே  பிஸ்பெனோல் ஏ  எனப்படும் வேதியல் பொருள்கள் இடம்பெற்றிருக்கிறது. இவை எண்டோகிரைன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் தடையை ஏற்படுத்துகின்றன.

இதனை உரிய நேரத்தில் பரிசோதித்து கொள்ள தவறிவிட்டால் அவர்களுக்கு பெருங்குடல் புண் மற்றும் கிரோன் நோய் எனப்படும் நோய் உண்டாகும். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் குரோன் நோயை விட பெருங்குடல் புண் பாதிப்பிற்கு ஆளாகுபவர்கள் அதிகம் என்று அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் ஃபிஸ்டுலா குடல் அடைப்பு, குடல் பாதிப்பு, பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகும்.

 அடிவயிற்றில் வலி, கடுமையான வயிற்று போக்கு, காய்ச்சல், உடல் எடையிழப்பு, பசியின்மை, சோர்வு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஆகியவை அறிகுறிகளாகும். குடல் அழற்சி நோய்களின் தொடக்க நிலைகளை குணப்படுத்த தற்போது மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.

பால்மா பொருட்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும். பீன்ஸ், முட்டை கோஸ், காலிப்ளவர் போன்ற வாயு உருவாக்கும் காய்கறிகளை சாப்பிடுவதை வதை்தியர்களின் கண்காணிப்பில் மேறகொள்ளவேண்டும். 

ஓமேகா =3 சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும். ஜீரணத்திற்கேற்ற அளவே சாப்பிடவேண்டும். அஜீரண கோளாறு ஏற்படாமல் சாப்பிடும் அளவையும், நேரத்தையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். மது, கோப்பி, செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

டொக்டர் சந்திரசேகர்

தொகுப்பு அனுஷா.