நிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து டெல்லி குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. 

டெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி இரவு, பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒருவர், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினார். மேலும் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

ஏனைய குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டது பின்னர், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

அதன் பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவர்களில் அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் 4 ஆம் திகதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறை கண்டறிவதில் குற்றவாளிகள் தோல்வியடைந்து விட்டனர். தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.