(நா.தினுஷா)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை காரணம் காட்டி கோத்தபாய ராஜபக்ஷ இனங்களுகிடையில் வெறுப்புணர்வுகளை தோற்றுவிக்க முயற்சித்து வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷார அமரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக நாட்டில் விஜயகலா மகேஸ்வரனின் உரை பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் அன்று மக்கள் மத்தியில் ஆற்றியிருந்த உரை வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம். இருப்பினும் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

இந் நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபா ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது விஜயகலாவின் உரையை நியாயபடுத்தும் வகையில் பேசியிருந்தார். 

இதுவும் சிங்கள, தமிழ் மக்களிடையில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மக்களின் நம்பிக்கைக்கு விரோதமான செயற்பாடாகவே இதனை கொள்ள வேண்டும் என்றார்.