தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்துக்கு எனது அமைச்சுப் பதவிதான் தடையாகவுள்ளது என்றால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என  அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும் காலத்தில் சம்பள பிரச்சினை தொடர்பான கூட்டு ஒப்பந்தம் செய்யப்படவிருக்கின்றது. கடந்த காலத்தில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் கூட்டாக இணைந்து பேசி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் சம்பள பிரச்சினையின்போது மக்களுடன் சேர்ந்து நானும் வீதியில் இறங்கி போராடுவதால் தான் ஓரளவு ஏனும் சம்பளம் கிடைக்கின்றது.

தற்போது கூட திகாம்பரம் அமைச்சராக இருப்பதால் தான் சம்பள உயர்வு விடயத்தை பேச முடியாதுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். சம்பள உயர்வுக்கு எனது அமைச்சு தான் தடை என்றால் அமைச்சு பதவியிலிருந்து விலகவும் நான் தயார். அமைச்சு பதவி எனக்கு ஒரு பெரிய விடயம் அல்ல.

அத்துடன் கடந்த காலங்களில் சம்பள பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்களுக்கு நிலுவை பணம் கிடைக்கவில்லை. இதற்கும் என்னை சுட்டிக்காட்டி குறை கூறினார்கள்.  இவ்வாறாக காலம் காலமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருபவர்களை நம்பும் நீங்கள் உண்மை சொல்லும் எங்களை ஏன் நம்புவதில்லை.

இவ்வாறான நிலைமையில் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இம்முறை கைச்சாத்திடும் தரப்பினர் தெளிவாக ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும். இல்லையேல் மக்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி போராடுவேன் என தெரிவித்தார்.