நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதி விசாரணைக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அதேவேளை மகிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்ற சீனாவுடன் தொடர்புடைய பல மோசடிகள் குறித்த விசாரணைகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா நிறுவனங்கள் தொடர்பிலான மூன்று பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015 ம் ஆண்டிலேயே முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியிருந்த போதிலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவை கைவிடப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா நிறுவனமொன்று தேர்தலிற்கு முன்னதாக ஸ்;டான்டர்ட் சார்டட் வங்கி ஊடாக பணம் வழங்கியிருந்ததை தெரியவந்ததை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன எனினும் இது குறித்த விசாரணைகள் பின்னர் கைவிடப்பட்டன இதனையே தற்போது நியுயோர்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோன்று நில்வல ஆறு அபிவிருத்தி,இரண்டு எம் ஏ60 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை,இரண்டு கப்பல்கள் கொள்வனவு செய்யப்ட்டமை தொடர்பிலான விசாரணைகள்  முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நில்வல விவகாரத்தில் அந்த அபிவிருத்தி திட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே சீனா நிறுவனத்திற்கு 30 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாகவும்,அதனை வழங்கிய அதிகாரி தற்போது நியுசிலாந்தில் வசித்து வருகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டம் ஆரம்பமாகவேயில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் இரு பிரதான கட்சிகளுடனும் செல்வாக்கை கொண்டிருந்த நபர் ஒருவரிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று முறைகேடுகள் தொடர்பில் நிதி மோசடிகள் குறித்த விசேட பொலிஸ் பிரிவினர் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இவர்களிடமிருந்து இது குறித்த விசாரணைகள் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விசாரணைகள் தற்போதும் இடம்பெறுகின்றனவா இவற்றை யார் முன்னெடுக்கின்றனர் என்பது குறித்து  எந்த தகவலும் இல்லை.