நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல உள்ளன, அதை விடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நீண்ட உரையின் சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாகவுள்ளது என  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை பிழையாக கூறியமையினால் அவரை தூக்கிலிட்டு கொல்லவா? இவர்கள் சொல்கிறார்கள். தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். 

ஆனால் இப்போது வடக்கில் இருக்கின்ற நிலவரத்தை நாம் சிந்திக்கவேண்டும். அங்கே  சட்டமும் ஒழுங்கும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன.  அண்மையில் யாழ்ப்பாணத்தில்  விஜயகலா மகேஸ்வரனின் உறவுக்கார பெண் தனது கணவரின் முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை அங்குள்ளது. சட்டவிரோத குழுக்களின் ஆளுகையும். செயற்பாடும் அங்கு அதிகளவாக இருப்பதனை காணமுடிகின்றது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மிக நீண்ட உரையின் ஒரு சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாக இருக்கின்றது. அவர் என்ன பேசினார் எவ்வாறான நிலையில் பேசினார் என்கின்ற அடிப்படை அறியாதவர்களே இப்போது வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிகோலுகின்றனர்.

மேலும் இந்த நாட்டில் தீர்க்கப்படாத முக்கிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. எனவே விஜயகலா மகேஸ்வரனின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என நான் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.