பண்டாரகம பொல்கொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கால்வாய் ஒன்றிலிருந்து 52 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடம்பில் வெட்டு காயங்கள் மற்றும் கட்டைகளால் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொலிசார் அறிவித்தனர். இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரின் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் புதல்வர்கள் இருவர் தலைமறைவாகியிருந்தனர்.

அவர்களை தேடி கைது செய்த பொலிசார் அவர்களிடம் தற்பொழுது விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, அவர்களே கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 22 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.