தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் அவர்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம்  அனுப்பி உள்ளனர். 

தாய்லாந்து குகையில் வெள்ளப்பெருக்குக்கு இடையே சிக்கி உள்ள 12 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்கான பணியில் அந்த நாட்டின் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், பொலிஸார், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குகையின் வெள்ளத்தை வடியச்செய்வதற்கான பணியில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் அனுப்பி உள்ளனர். அந்தக் கடிதங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

போங் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிற சிறுவன் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், “என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்திரமாக இருக்கிறேன்” என கூறி உள்ளான்.

இன்னொரு சிறுவன், “அம்மா, அப்பா, உடன்பிறப்புகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நான் வெளியே வந்த பின்னர் அம்மா, அப்பா எனக்கு சாப்பிட மூகாத்தா விருந்து (திறந்தவெளி விருந்து) வேண்டும்” என்று கேட்டு இருக்கிறான்.

சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எக்காபொல் சாண்டாவோங், சிறுவர்களை குகைக்கு அழைத்துச்சென்றதற்கு மன்னிப்பு கேட்டு அவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “அன்பான சிறுவர்களின் பெற்றோரே, அவர்கள் எல்லாரும் நலமாக உள்ளனர். நான் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வேன். என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமுடன் கூறி உள்ளார்.

இதேபோன்று பயிற்சியாளர் எக்காபொலுக்கு சிறுவர்களின் பெற்றோரும் கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், அவர்மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு நன்றி என்றும் தெரிவித்து உள்ளனர்.

மாகாண கவர்னர் நாரோங்சாக் கூறும்போது, “சிறுவர்கள் நல்ல பலத்துடன் உள்ளனர். ஆனாலும் நீந்த முடியாது. அவர்களுக்கு முக்குளிப்பு மற்றும் சுவாச பயிற்சிகள் தரப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.