(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

புதிய தேர்தல் முறைமையினால் எந்த இனத்திற்கும் கட்சிக்கும் அநீதி ஏற்படாது. தேர்தல் தாமதம் ஏற்படும் என்ற காரணத்திற்காக பழைய முறைமைக்கு செல்வது நியாயமில்லை. மோசடிமிக்க பழைய முறைமைக்கு சென்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். 

அதுமாத்திரமின்றி பழைய முறைமை இனவாதத்தை தூண்டும். ஆகவே பழைய தேர்தல் முறைமைக்கு இனிமேல் இடமில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் எல்லை நிர்ணய ஏற்பாடுகளை ஒரு மாதத்தில் முடித்து கொண்டு உடன் தேர்தல் செல்ல முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா சபையில் தெரிவித்தார்.

மாகாண சபைக்கான புதிய தேர்தல் முறைமையில் 50 க்கு 50 வந்தால் வாக்களிப்பதாக சிறுப்பான்மை தலைவர்கள்  கூறினாலும் தற்போது அதனையும் எதிர்க்கின்றனர். அரசியலுக்காக சமூகத்தை விற்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வ கட்சிகளுடனும் பேசியதன் பின்னர் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை வெளியிடுவோம் என குழுவிடம் கோரினேன். 

நான் தேர்தல் கண்காணிப்பு அமைப்பினை  சந்திதேன். இதன்போது அவர்கள்  தேர்தல் முறைமை மாற்ற வேண்டாம். கலப்பு முறைமையை கொண்டு செல்லுங்கள் என்றே என்னிடம் கோரினர். 

ஆகவே பழைய முறைமைக்கு நாம் செல்ல மாட்டோம். புதிய முறைமையினால் உள்ளூராட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. ஊழல் மோசடிகளும் பண பரிமாற்றங்களும் முழுமையாக குறைவடைந்தது.

புதிய முறைமைக்கு வாக்களித்து விட்டு தற்போது இந்த முறைமை சரியில்லை என்று விமர்சிக்கின்றனர். இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கை தூக்கினார். 

ஆனால் தற்போது விமர்சனம் செய்கின்றனர். விமர்சனங்களை மாத்திரமே செய்கின்றனர். எந்தவொரு ஆலோசனையோ அல்லது மாற்று வழிமுறைகளையோ கூறுவதில்லை. 

சிறுப்பான்மை கட்சிகள் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து இனவாத அரசியல் நடத்தி வருகின்றர். இதன் ஊடாக உறுப்பினர்கள‍ை அதிகரித்தனர். 

புதிய தேர்தல் முறைமையினால் எந்த இனத்திற்கும் கட்சிக்கும் அநீதி ஏற்படாது. சிறுப்பான்மையின கட்சிகள் தனித்து போட்டியிட மாட்டார்கள். போட்டியிட்டால் ஒரு உறுப்பினர்கள் கூட கிடைக்காது.

 அரசியலுக்காக சமூகத்தை விற்கின்றனர். நான் நாட்டின் மீது பற்றுள்ளனவன். இந்த முறைமையினால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறையாது. முஸ்லிம் சமூகத்தில் சிறியளவிலான வாக்கு வீதங்களை கொண்ட கட்சிகள் உள்ளன. அவர்களுக்கு அநீதி ஏற்பட வாயப்புண்டு.  

ஆரம்ப காலங்களில் தேசிய கட்சியிலேயே சிறுப்பான்மையினர் இருந்தனர். தற்போது அவ்வாறு இல்லை. தற்போதும் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் தேசிய கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர். 

அத்துடன் தேர்தல் தாமதம் ஏற்படும் என்ற காரணத்திற்காக பழைய முறைமைக்கு செல்வது நியாயமில்லை. நான் அழைக்கும் கூட்டங்களுக்கு சிறுப்பான்மை கட்சிகளின் தலைவர்கள் சிலர் வருவதில்லை. 

பணத்தை மையமாக கொண்ட அரசியல் எமக்கு தேவையில்லை. மோசடிமிக்க பழைய முறைமைக்கு சென்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். எல்லை நிர்ணய அறிக்கையை எப்படி விவாதிப்பது. 

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் எல்லை நிர்ணய ஒரு மாதத்தில் முடிக்க முடியும். எல்லை நிர்ணயத்தில் குறைப்பாடு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்தால் விரைவில் தேர்தலை நடத்த முடியும்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் பணம் விநியோகித்தமை யார் என்று அனைவருக்கும் தெரியும். எனினும் சிறுப்பான்மை கட்சிகளுக்கு ஆட்டம் ஆடுவதற்கு தேசிய கட்சிகள் இடமளித்தமையே பெரும் தவறாகும்.

பழைய  முறைமைக்கு செல்வது இனவாதத்தை மென்மேலும் அதிகரிக்கும். நாட்டின் மீது நான் பற்று வைத்துள்ளேனன். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பழைய முறைமை கொண்டு வர இடமளிக்க வேண்டாம் என்றார்.