(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

தேர்தலில் அரசாங்கதின் பலவீனத்தை மூடி மறைக்க தேர்தல் முறைமை மீது பழி சுமத்துவது ஏற்றுகொள்ள முடியாததாகும். புதிய தேர்தல் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக செலவுகள், அடாவடித்தனம் குறைந்த தன்மை காணப்படுகின்றது. 

அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைக்க மீண்டும் தேர்தல் முறைமையை  தமக்கு சாதகமாக பயன்படுத்துவது மோசமானதாகும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.  

மீண்டும் பழைய முறைமைக்கு செல்லாது புதிய முறைமையில் திருத்தங்களை கையாண்டு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று மாகாணசபைத் தேர்தல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தேர்தல் உரிய நேரத்தில் இடம்பெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மக்களின் தேர்தல் உரிமை பறிபோகக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.  தேர்தல் முறைமை குறித்து பலவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 இதற்கு முன்னர் 2012ஆம்  ஆண்டு ஒரு தேர்தல் முறைமை முன்வைக்கப்பட்டது. எனினும் அது பொருத்தம் இல்லாத ஒன்று என்பதும், மாற்றம் ஒன்று வேண்டும் என்பதை நாம் அப்போதே தெரிவித்தோம். 

எனினும் பாராளுமன்றத்தில் எம்மை விமர்சித்த பலர் ஜே.வி.பிக்கு பாதிப்பு என்பதால் தான் தேர்தல் முறைமையை எதிர்ப்பதாக கூறினார்கள். எனினும் நாம் கூறியது இன்று சரியாக உள்ளது. 

குறித்த தேர்தல் முறைமையின் செலவுகள், அதனால் ஏற்படும் அநீதிகள் என்பன மிகவும் மோசமானது. இன்று மிகவும் இலகுவான வியாபாரமாக தேர்தல்கள் பெற்றுள்ளது.

அமைச்சர், மந்திரிகளாக  முன்னர் அவர்களது சொத்து விபரங்களையும் அவர்கள் பதவிகளை பெற்ற பின்னர் அவரது சொத்துக்களை பாருங்கள் தேர்தல் எவ்வளவு இலாபமான வியாபாரம் என்பது தெரியும். 

அவர்களின் தேர்தல் வியாபரத்தை தேர்தல் மூலமாக மூடி மறைக்க முடியாது. தேர்தல் என்பது மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டு நாட்டுக்கான தீர்மானங்களை எடுக்கும் பிரதான நோக்கமாகும். 

பிரதேச சபைகளின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அதனை நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம். 

இது குறித்து உரிய அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். 

தேர்தல் என்பது மக்களை பாதுகாக்கும் ஜனநாயகத்தை உருவாக்கி அதன் மூலமாக நாட்டினை பலப்படுத்தும் நோக்கத்துக்காக தேர்தல் நடத்தபட வேண்டும். மாறாக இன ரீதியிலான தன்மைகளுக்கு அமைய தமது அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இதனை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம். 

இந்த நாடு சகல மக்களையும் இணைத்த நாடாகும். இதில் சகலரும் சகலரையும் ஆதரிக்க வேண்டும். இன்று இன முரண்பாடுகள் ஏற்பட பிரதான காரணமே இன ரீதியிலான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றமையின் காரணமாகும். இதற்கு இனம், மொழி, மதம், பிரதேசவாதங்களை  பயன்படுத்திக்கொண்டு தமது அரசியலை தக்கவைத்து வருகின்றனர். இதுவே பிரச்சினைக்கு காரணமாகும். 

நாம்  பிரிவதா , இணைவதா என்பது சிந்தித்து நாட்டுக்கு எந்தத்  தேர்தல் முறைமை அவசியமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். ஆனால் தமது வியாபாரங்களை கருத்தில் கொண்டும் மக்களை வைத்து வியாபாரம் செய்யவும் பலர் சிந்தித்து வருகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 

குறித்த தேர்தல் முறைமை குறித்து நீண்ட காலமாக கலந்துரையாடியுள்ளோம். மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த ஆட்சி உருவாக்கப்பட்ட  நேரத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது போலவே தேர்தல் முறைமையை மாற்றுவதாக கூறினர் . 

எனினும் தேர்தல் முறைமை மாற்றத்தின் மூலமாக அரசாங்கத்துக்கு பாதகமான தீர்வுகள் அமையப் பெற்றதை  அடுத்து மீண்டும் தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என கூறுகின்றீர்கள். 

கடந்த தேர்தலில் ,தேர்தல் முடிவுகள் வேறு பக்கம் மாறியிருந்தால், அரசாங்கத்தின் பக்கம் சாதகமாக இருந்திருந்தால் மாற்றத்தை செய்திருபீர்களா? தேர்தலில் அரசாங்கம் தோற்றத்தின் காரணமாக தமக்கு வாய்ப்பினை தேடிக்கொள்ள தேர்தல் முறைமையினை மாற்றுகின்றனர். உங்களின் அதிகாரத்தை தக்கவைக்க நீங்கள் தேர்தல் முறைமையை மாற்ற வேண்டாம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுங்கள். 

பலமான அரசாங்கத்தினைன் மக்கள் உருவாகிய போதும் நீங்கள் அரசாங்கத்தை அழித்துவிட்டு, இறுதியில் தேர்தல் முறைமை மீது பழிபோட்டுள்ளீர்கள். இந்த தேர்தல் முறைமை சிக்கலானது அல்ல. விருப்பு வாக்கு இல்லாது போவது எமக்கு சிக்கல் இல்லை. கட்சியாக நாம் இதன் விளைவுகளை அவதானித்துள்ளோம்.

 இலங்கை வரலாற்றில் குறைந்த மோதல்கள், இழப்புகளுடன் இடம்பெற்ற தேர்தல் இந்த தேர்தலாகும். தெரிவானவர்கள் மோசடிக்காரர் என்றாலும்  கூட முரண்பாடுகள் இல்லாத தன்மை இருந்தது.

 செலவுகளை பார்த்தலும் மிகவும் குறைவாக காணப்பட்டது. புதிய அரசியல் முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை மீண்டும் குழப்புவதற்கு நாம் தயார் இல்லை. இன ரீதியான சில முரண்பாடுகள் ஏற்படும் என்றால், போனஸ் ஆசனங்கள் குறித்தும், கலந்துரையாட முடியும். 

பல ஆலோசனைகள் உள்ளன. அவற்றை நாம் ஆராய முடியும். ஆனால் மீண்டும் பழைய சிக்கல்களை கையாள வேண்டாம். குறுகிய திருத்தங்களுடன் தேர்தலை சந்திப்போம் என குறிப்பிட்டார்.