சட்டபேரவைக்கு செல்வதே வீண் என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற  பேராட்டத்தில் பங்குபற்றி தெரிவித்ததாவது,

‘விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் சேலம்-சென்னை எட்டு வழி பசுமை வீதி திட்டத்தை மாற்று பாதையில் செயற்படுத்த நிபுணர்குழுவை அமைக்க வேண்டும்.

குறித்த  திட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது,

போராட்டங்களை சில அரசியல் கட்சிகள் தூண்டுவதாக பேட்டி கொடுக்கிறார். அவரால் எட்டு வழி வீதி திட்டம் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று சொல்ல முடியுமா? சட்டமன்றத்தில் தூத்துக்குடி என்ற வார்த்தையை பேச முடியவில்லை.

இதனால் தூத்துக்குடி என்பதற்கு பதில் சாத்துக்குடி என்று கூறலாமா? என்று கேட்டேன். பொதுமக்கள் பிரச்சினை குறித்து பேசினால் அதை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்.

சட்டமன்றத்துக்கு செல்வதே வீணாக இருக்கிறது. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டி உள்ளதால் சட்டமன்றத்துக்கு செல்கிறோம். போராட்டங்களை மத்திய- மாநில அரசுகள் ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை.’ என்றார்.

முன்னதாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற உண்ணா நிலை போராட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்தியயூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.