தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறும் புதிய காணொளியை  கடற்படை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் காணப்பட்டனர். நீர்மூழ்கி வீரர்களுடன் அவர்கள் உரையாடும் காணொளிவை அரசு வெளியிட்டது. சிறுவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. 

முதலில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஒரு மருத்துவர், ஒரு தாதி உள்ளிட்ட 7 பேர் சென்றனர். இவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி நீந்திச் செல்லும் பயிற்சி பெற்றவர்கள். தற்போது 10 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் சிறுவர்களை வெளியே அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. அவசரப்பட்டு வெளியே அழைத்து வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்க வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

இந்நிலையில், குகைக்குள் இருக்கும் சிறுவர்கள் நலமுடன் இருப்பதை காட்டும் புதிய காணொளி ஒன்றை தாய்லாந்து கடற்படை இன்று வெளியிட்டுள்ளது. 

அந்த காணொளி பதிவில், சிறுவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் கெமரா முன்பு தனது புனைப்பெயரை கூறி தன்னை அறிமுகம் செய்து , ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என கூறுகிறார்கள். 

தாய்லாந்து கடற்படையின் முகப்புத்தக தளத்தில் வெளியிடப்பட்ட இந்த காணொளியைப் பார்த்ததும், சிறுவர்களின் பெற்றோர் ஆறுதல் அடைந்துள்ளனர்.