இருபதுக்கு-20 போட்டிகளில் விரைவாக 2000 ஓட்டங்கள் கடந்தவீரர் என்ற  சாதனையை இந்திய அணித்தலைவர்  விராட்கோலி படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபதுக்கு-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி 9 ஓட்டங்களை எடுத்தபோது இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது.

 இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு இருபதுக்கு-20 போட்டியில்  இந்திய அணி விளையாடியது. இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணித்தலைவர் விராட் கோலி இருபதுக்கு-20 போட்டியில் 1983 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 17 ஓட்டங்கள் எடுத்தால் 2000 ஓட்டங்களை கடந்த 3ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலைமை காணப்பட்டது.

ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, இரண்டாவது ஆட்டத்தில் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ஓட்டங்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சொயிப் மாலிக் 2000 ஓட்டங்களை கடந்து 3ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபதுக்கு-20 போட்டியில் இந்திய அணித்தலைவர்  விராட் கோலி 9 ஓட்டங்களை  எடுத்தபோது இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இருபதுக்கு-20  போட்டிகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை  கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின்  மெக்கலம் 66 போட்டிகளிலும், குப்தில் 68 போட்டிகளிலும், சொயிப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.