சட்டவிரோதமாக ஒரு தொகை மாணிக்க கற்களை நாட்டிற்குள் கடத்தி வந்த சீன பெண் ஒருவரை நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் தாய்லாந்து - பேங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் வந்த குறித்த பெண்ணை சோதனையிட்ட போது அவரது பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த மாணிக்க கற்களை சுங்கப் பிரிவினர் மீட்டதோடு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 35 வயதான சீனப் பிரஜையாவார். குறித்த பெண் இலங்கை பிரஜை ஒருவரை திருமணம் செய்து 12 வருடங்களாக நீர்கொழும்பு பகுதியில் வசித்து வருபவராவார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து பெரியளவிலான மாணிக்க கற்கள் 18உம் சிறியளவிலான கற்கள் ஒரு தொகையும் பொதியிடப்பட்ட 13 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 4,864,777 ரூபாவாகும்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் 40000 ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.