இந்தியா மற்றும் இலங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றியீட்டியது. 

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந் நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது இருபதுக்கு 20 ‍போட்டி நேற்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு இலங்கிலாந்தின் மென்செஸ்டர் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய இந்திய அணி இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம்புகுந்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களான ஜோசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி இருவரும் இணைந்து 50 ஓட்டங்களை அணிக்காக சேர்த்த நிலையில் ஜோசன் ரோய் 20 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்திருந்த வேளை உமஷ் யாதவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்தபடியாக ஜோஸ் பட்லருடன் அலெக்ஸ் அலிஸ் கைகோர்த்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 12 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் இருந்தது. இருப்பினும்  குல்தீப் யாதவ்வின் தனது சூழல்பந்துகளின் மூலமாக இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த வியூகம் அமைத்து 24 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை அடுத்தடுத்து சாய்த்தார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

இங்கிலாந்து அணி சார்பாக ஜோசன் ரோய் 30 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களையும் டேவிட் வில்லி 29 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்களையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் ஹர்த்ரிக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் பெற்றுக் கொண்டனர்.

160 என்ற வெற்றி இலக்கை நோக்கி களம்புகுந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மாவின் ஜோடியை வில்லி பிரித்தார். அதன்படி தவான் 4 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை வில்லியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு வெளியேறினார். 

அவரை தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் கைகோர்த்த‍ லோகேஷ் ராகுல் தனது ஓயாத அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். 

இதன் காரணமாக இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் வகுத்த வியூகங்கள் அனைத்தையும் ராகுல் உடைத்தெறிந்தார். ஒரு கட்டத்தில் ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரோஹித் சர்மா 32 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரஷித்துடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 18.2 ஓவருக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 163 ஓட்டங்களை எடுத்து வெற்றயீட்டியது. 

இங்கிலாந்து அணியின் பந்தை துவம்சம் செய்த லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக 24 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த குல்தீப் யாதவ் தெரிவானார்.

இந்திய அணி சார்பாக லோகேஷ் ராகுல் 101 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 32 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 20 பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சோபியா கார்டண்ஸில் இடம்பெறவுள்ளது.