இந்தோனேசியாவில் அன்மையில் ஏற்பட்ட படகு விபத்தில் 163 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இன்று மேலும் ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகிலிருந்த 163 பேரில், சிலரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டன. மற்றய அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை மேலும் ஒரு படகு  விபத்துக்குள்ளானது. 139 பேர் படகில் இருந்ததாகவும் இதுவரை 12 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான படகில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுயதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.