(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பழைய விலையில் அல்லது கூடிய விலையில் சமயல் எரிவாயுவை விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஜூன் 29 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 5 கிலோ கிராம் சமயல் எரிவாயுவின் விலை 55 ரூபாவாலும் 2.3 கிலோ கிராம் சமயல் எரிவாயுவின் விலை 25 ரூபாவாலும் 12.5 கிலோகிராம் சமயல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது. 

எனினும் இந்த புதிய விலை பட்டியலை மீறி பழைய விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன் இவ்வாறான விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு எதிராக 011-7755481-3 அல்லது 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு அறியத்தருமாறும் குறிப்பிட்டுள்ளார்.