(எம்.சி. நஜிமுதின்)

சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் உலக நாடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வரி விலக்குடன் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பிராகரம்  உலக நாடுகளிலுள்ள குப்பைகளை வரி விலக்குடன் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுகாதாரக் கழிவுகள், நகரக் கழிவுகள், வைத்தியசாலை இரசாயன கழிவுகள் உட்பட உலக நாடுகளிலுள்ள  குப்பைகளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந் நிலையில் மீதொட்டமுல்லையிலுள்ள குப்பைகளை அகற்றமுடியாத நிலை இருக்கும் சந்தர்ப்பத்தில் உலக நாடுகளிலுள்ள குப்பைகளை இங்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் குப்பைகளை வகைப்படுத்தி களஞ்சியப்படுத்துவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் மின்சாரம் வழங்கல் மற்றும் வேறு சேவைகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 

எனவே குப்பை முகாமைத்துவதத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு எந்தவொரு நாடும் வரையறையின்றி முதலீடு செய்வதற்கும் வழி வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த இந்த உடன்படிக்கையானது ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தை ஏமாற்றும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.