வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இன்று அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் தற்போது அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தனது பிரிவில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 

அவசர கலந்துரையாடல் ஒன்றினை தனது பிரதேச செயலக பிரிவிலுள்ள அனைத்து கிராம அலுவலர்களுடனும், பாடசாலை அதிபர்களுடனும், முச்சக்கரவண்டி சங்கங்களின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுடனும், சிகையலங்கார சங்கங்களின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுடனும் மேற்கொண்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், நாம் அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இணைந்து செயற்படுகின்ற போதே குற்றச்செயல்களை குறைத்துக் கொள்ள முடியும். 

இதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதையற்ற இனிய வாழ்வு திட்டத்தை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வலுவாக அமுல்படுத்தி போதையற்ற வாழ்வு வாழ்வதற்கு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

கிராம அலுவலர்கள் அனைவரும் பிரிவிலுள்ள அனைத்து சட்டரீதியற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தங்களுக்கு வழங்கப்பட்ட சமாதான நீதிவான் என்ற பதவியின் பிரகாரம் சட்டரீதியான நடவடிக்கைகளை  எடுக்கவேண்டும்.

 குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராம அலுவலர்களினால் குற்றவாளிகள் தொடர்பான வரிசை அறிக்கையினை கிரமமாக பேணுவதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கும் எனக்கும் அறிக்கையிடுங்கள் எனத் தெரிவித்தார்.