யுத்தம் நிறைவடைந்து ஒன்பது வருடகாலங்கள் கடந்திருக்கின்ற நிலையில் ரணங்களைச் சுமக்கும் முல்லை மண் அதன் பூர்விக தரப்பான தமிழர்களிடமிருந்து பறிபோய்க்கொண்டிருக்கின்றது. அங்கு அரங்கேறும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஆக்கிரப்பு நடவடிக்கைள் தொடர்பான முழுவிபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எமது இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின்போது வெளிப்படுத்தியிருந்தார். 

அதன் முழுவடிவம் வருமாறு,

முப்படையின் ஆக்கிரமிப்பு எங்களுக்கு கிடைக்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி அதாவது, 2015 ஆம் ஆண்டு மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம் 13 ஆயிரத்து 546 ஏக்கர் நிலங்கள் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 

முல்லைத்தீவு வடக்கு பகுதியில் சமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு கடற்படையினரின் வசம் காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியின் 679 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரின் வசம் காணப்படுகின்றது.

இந்த நிலப்பரப்பை கையகப்படுத்துவதற்காக நில அளவையாளர்களின் உதவிகளை இராணுவத்தினர் பெற்றிருந்தனர். அச்சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் மேற்படி பகுதியில் உண்மைக்கு புறம்பாக 617 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவ தேவைக்காக பயன்படுத்துவதற்கு நில அளவை செய்யப்படுவதாகவே குறிப்பிடப்பட்டது.

திருமுறிகண்டி பகுதியில் 1703 ஏக்கர் நிலத்தில் தனியான இராணுவக்குடியிருப்பு நிறுவப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பிரவேசிக்க முடியாத சூழல் தற்போது காணப்படுகின்றது. கொக்குதொடுவாய் பகுதியில் 170ஏக்கர் நிலமும் மாவட்ட அலம்பில் கனேடியன் வீதியில் உள்ள 30 ஏக்கர் நிலங்களும் இராணுவத்தினரின் வசம் காணப்படுகின்றது.

கேப்பாபுலவில் விமானப்படையினரால் குறிப்பிட்டளவு காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் அது குறித்த சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அதேபோன்று முல்லைத்தீவு காட்டப்பகுதியில் படையினர் வசம் உள்ள நிலங்களின் அளவுகளையும் பெறமுடிந்திருக்கவில்லை.

மேலும் அம்பகாமம் பகுதியில் கிட்டத்தட்ட 7 குளங்களை உள்ளடக்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்தின் பிடியில் உள்ளது. இவ்வாறு ஏழு குளங்களை உள்ளடக்கிய நிலப்பரப்புக்கள் இராணுவ வசப்படுத்தப்பட்டுள்ளதால் அக்குளங்களை அண்டிய விவசாய நிலங்களும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கின்றது.

ஒட்டுசுட்டான் திரமநாதன் எனும் குளம் மூடப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. குளங்கள் கட்டுவிக்கப்பட்டு விவசாயம் ஊக்குவிக்கப்பட்ட காலம் மாற்றமடைந்து விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபரத்தில் உள்ளடக்கப்பட்ட தகவல்களில் கொக்குத்தொடுவாய்ரூபவ் அலம்பில் பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் உள்ளடக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்திற்கு அப்பால் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரத்து 449 ஏக்கர் நிலப்பரப்புக்கள் இராணுவத்தினரின் வசம் காணப்படுவதற்கான சான்றுத் தகவல்கள் உள்ளன.

மகாவலி அபிவிருத்தியின் பெயரிலும் அபகரிப்பு

அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் வாழ்வியலை பாதிக்காது வளம்படுத்துபவையாக அமைய வேண்டும். அவ்வாறு இருக்கையில் பூர்வீக குடிகளான தமிழர்களை அகற்றி வளமான பகுதிகளை கையகப்படுத்தும் வகையில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முல்லையில் நகர்த்தப்படுகின்றது. 

1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மகாவலி “எல்” வலயம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பின்னர் 2007ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி மகாவலி எல் வலய எல்லைகளை விஸ்தரித்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாங்குளத்திலிருந்து தண்ணீர் ஊற்று, முல்லை மாவட்ட செயலக பிரதேசம், செல்வபுரம் வரையில் மகாவலி எல் வலய பகுதிகளாக வரையறுக்கப்பட்டள்ளது. பாராக்கிரம சமுத்திரத்திலிருந்து மகாவலி எல் வலயத்திற்கு எவ்வாறு நீரைக் கொண்டுவரப்போகின்றார்கள் என்ற கேள்வி எழுக்கின்றது.

அதேநேரம் மகாவலி “எல்” திட்டத்தின் ஊடாக காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாக கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் வீரன்வயல், பண்டிசுட்டான் வயல், படுகாட்டுவயல், தட்டான்குளம் வயல், வேப்பங்குளம் வயல் என கிட்டத்தட்ட 485 ஏக்கர் நிலங்களும் கொக்குத்தொடுவாய் மத்தியில் சிவந்தாமுறிப்பு, ஊரடி குளவயல், சகலாற்று வெளி என 950 அல்லது 980 ஏக்கரும், உத்திராயன் வயல், ஆமையன் வயல், அடையக்கறுத்தான் சாம்பல் குள வயல் என 899 ஏக்கரும் கொக்கிளாய் மேற்குப் பகுதியில் மாரியாமனையில் 185 ஏக்கரும் அக்கறைவெளியில் முறையே 400, 585 ஏக்கரும் என மொத்தமாக 2919 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பகுதியில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மிகுதிக் காணிகளில் வன இலாகா தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. இவற்றில் எஞ்சிய காணிகளில் ஊடக தமிழ் மக்கள் சென்று விவசாயம் செய்வதற்கு இயலாதவாறான நிலைமைகளை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

அதுவொருபக்கமிருக்கையில் ஆறாயிரம் ஏக்கர் பரப்பிற்கு நீர்பாசன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறி “கிவிலோயா” என்ற திட்டம் நகர்த்தப்பட்டு வருகின்றது. இந்த கிவிலோயா திட்டத்தின் மூலமாக குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு வெலிஓயா என்ற பெயரில் குடியேற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இராமன் குளம், கொட்டோடைக்குளம், ஒயா மடுக்குளம், வெள்ளாங்குளம் பெரிய கட்டுக்குளம், பனிக்கல் மடுக்குளம், சன்ன முற்றமடுக் குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம் என பத்து சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் அதனுடைய வயற்காணிகளும், வெடிவைத்தகல்லுக் குளத்தின் கீழ் வருகின்ற வயற்காணிகள் பகுதியளவிலும் நாவலர் பார்ம், கல்லாற்றுக்குளம், ஈச்சங்குளம், கூழங்குளம், ஆகிய சிறிய குளங்கும் இந்த குளத்தின் வயற்காணிகளும் மேற்படி நீரேந்து திட்டத்தில் அகப்பட்டு மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.

குடிப்பரம்பல் மாற்றம் நிகழும் மணலாறு

மகாவலி எல் திட்டத்தின் மற்றொரு நிகழ்ச்சி நிரலாக குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போது வெலிஓயா என்று தற்போது அழைக்கப்படும் மணலாறு பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபையொன்று இல்லை.

அவ்வாறிருக்கையில் 17 கிராமங்களை உள்ளடக்கி 3, 336 குடும்பங்களின் 11,189பேரை கொண்ட ஒன்பது கிராம அலுவலர் பிரிவோடு, புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவிலுள்ள காணிகள் அனைத்தும் கரைதுறைபற்று பிரதேச எல்லைக்குள்ளேயே இருக்கின்றன. தனியாக காணிகள் இல்லாதபோதும் தனிச்சிங்கள பிரதேச செயலகப்பிரிவை ஏற்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின்படி அவர்களுக்கென்று தனியான காணி அளவீடு தற்போது வரையில் நடைபெறவில்லை. கரைதுறைப்பற்று பிரதேச காணிகளை உள்வாங்கி இப்படியொரு குடியேற்றத்தையமைத்து பெரும்பான்மையாக இருக்கும் எங்களுடைய மக்களை சிறுபான்மையாக்கி குடிப்பரம்பலை மாற்றும்; நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துவருகின்றார்கள்.

வன இலாக்காவினரின் வஞ்சனை

நாங்கள் அறிந்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மரங்களைத் தறிப்பதற்கு அனுமதிகள் பெரியளவில் கொடுப்பதில்லை. பல கட்டுப்பாடுகள் இருந்தன. பல மரங்களை நாட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். அவை தற்போதும் பல இடங்களில் சாட்சி சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் வளர்க்கப்பட்ட தேக்கு மரங்கள் அவர்களது சேவையை பறைசாற்றி நிற்கின்றன.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிறகு 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு புதிதாக எல்லைக்கல் போட்டதை வன இலாகாவினரே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேரடியாகத் தெரிவித்திருந்தனர்.

முல்லைத்தீவில் உள்ள 4,035 குடும்பங்களின் நிலங்களான 13,232 ஏக்கர் வரையான காணிப்பகுதிகள் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றோடு சேர்த்து கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின் படி கிட்டத்தட்ட 12ரூபவ்183ஏக்கர் நிலம் வன இலாகாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. இந்தக் காணியின் பரப்பு இன்னும் அதிகமாகவே இருக்கலாம் என்ற அச்சமும் உள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களமும் அபகரிப்பு களத்தில் குதித்தது

இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று வனஜீவராசிகள் திணைக்களமானது கொக்குளாய் முகத்துவாரத்தில் தங்களுக்குச் சொநதமான இடம் என்று விளம்பரப்பலகை போட்டிருக்கின்றார்கள்.

கடந்த 2017 ஆம் அண்டு 24 ஆம் திகதி நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரோராவினால் நந்திக்கடல் மற்றும் அதனைச்சூழவுள்ள 4,141.67 ஹெக்டேயார் நிலப்பகுதியும் நீர்ப்பரப்பும் நாயாறு மற்றும் அதனைச்சூழவுள்ள 4,464. 35 ஹெக்டேயார் நிலப்பகுதியும் நீர்ப்பரப்பும் 469ஆம் அத்தியாயமான தாவர விலங்கியல் பாதுகாப்பு கட்டளைச்சட்டம் 2 ஆம் பிரிவின் முதலாம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமாக 8,606.02 ஹெக்டேயார் நிலம் இதற்குள் அடங்குகின்றது.

ஏறத்தாள 21,515 ஏக்கர் அளவில் நிலப்பரப்பை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கையகப்படுத்தியுள்ளது. நந்திக்கடலையும் நாயாறையும் நம்பி வாழ்கின்ற மக்கள் பகுதி அளவென்றாலும் அவர்கள் தங்களுடைய வீச்சுவலை மூலமாகவும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுவலை மூலமாகவும் பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் ஜீவனோபாயமாக நந்திக்கடலையும் நாயாறையும் நம்பியிருக்கின்றனர்.

இதனைத்தவிர நந்திக்கடல் மற்றும் நாயாறு பிரதேசங்களைச் சூழவுள்ள சிறுபோக பயிர்ச்செய்கைகள் மற்றும் வயல்நிலங்கள் வற்றாப்பளையுள்ள வயல்நிலங்கள் வரை உள்ளடக்கப்பட்ட வரைபடம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமானதென மேற்குறிப்பிட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 10ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை இவர்கள் 2017 ஜனவரி மாதம் 24ஆம் திகதி வெளியிட்டுவிட்டு இதுவரை இரகசியமாகவே வைத்திருந்ததை நாம் காணக்கூடியதாகவிருந்தது.

பரிதாபமாகியுள்ள மீனவர்கள்

முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிரூபவ் குடியேற்றம் மட்டுமல்லாது கடல் வளங்களும் அபகரிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக நாயாற்று பகுதியில் இராணுவ அழுத்ததுடன் சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றப்பட்டனர். அவர்கள் தமிழ் மக்களோடு தர்க்கம் புரிந்து 72 படகுளை தொழில் செய்ய அனுமதி பெற்றனர். பின்னர் 300இக்கும் அதிகமான படகுகளை வருவித்து தற்போது மீனவக் கிராமம் அமைவதற்கு வழிவகுத்துள்ளனர். இதனால் அங்கு தமிழர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அட்டைத் தொழில் என்ற போர்வையில் சாலைப் பகுதிகளில் பெருமளவிலான வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து தொழில் புரிகின்றார்கள். அத்துடன் வெளிமாவட்டத்தவர்கள் அட்டைத் தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிட்டவையை பொருட்படுத்தாது, இரவுவேளைகளில் வெளிச்சம் பாய்ச்சி தொழில் செய்கின்றனர். இதனால் எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த முடியாது தவிக்கின்றார்கள் புத்தர் சிலைகளும் தொல்பொருள் திணைக்கம் அண்மையில் நாயாற்றுக்கு அருகில் இருந்து வேம்படி சந்தி வரையான பிரதான வீதிக்கு கடற்கரை பக்கமாகவுள்ள அந்த காணிகளை நீண்ட தூரத்திற்கு தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைகள் இடப்பட்டுள்ளன. ஒட்டுச்சுட்டான் பகுதியில் ஒரு தனியார் ஒருவர் தனது காணியை நீண்ட விவவாத்திற்கு பின்னர் இராணுவத்திடமிருந்து காணியைப் மீளப்பெற்ற சொற்ப கணத்தில் தொல் பொருள் திணைக்களத்தினர் அங்குவந்து கண்காணித்து எல்லை இட்டனர். இவ்வாறான சம்பங்களும் நடந்தேறியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் இடம்பெயர்ந்த போது ஒருவிகாரை கூட இருக்கவில்லை. ஆனால் தற்போது 67விகாரைகள் இங்கு இருப்பதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. முகத்துவாரம் பகுதியில் மூன்று, நான்கு பௌத்த சிங்கள குடும்பங்கே உள்ள நிலையில் கொக்குளாய் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்படுகின்றது. அதனை நிறுத்துமாறு மாவட்ட செயலாளர் உட்பட பல அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதும் இராணுவத்தின் துணையுடன் அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு வடிவத்தினூடாகவும் எங்களுடைய மண்ணை திட்மிட்டு அபகரிப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது இவ்வாறான நடவடிக்கைகளினால் எமது பூர்வீக நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன.

(நேர்காணல்:- ஆர்.ராம்)