(இரோஷா வேலு) 

மீகொட பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணித்துள்ள பெண்ணொருவரின் சடலமொன்று மீகொட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

50 வயதுடைய வனிகாபந்துகே மாலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இம்மரணம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகார மாவத்தை, 4 ஆவது ஒழுங்கை, ஹேனவத்தையில் அமைந்து வீடாென்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. 

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரால் இப்பெண்ணின் சடலமானது அவரது வீட்டின் பின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் மீது கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும் இதுவரையில் இம்மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதோடு அது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. 

இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று  பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது. 

 இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.