ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிணண கால்பந்தாட்டத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளுடன் முன்னோடி கால் இறுதிச் சுற்று (16 அணிகள் இரண்டாம் சுற்று நொக் அவுட்) முடிவுக்கு வருகின்றது.

சுவீடனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான போட்டியும் கொலம்பியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியுமே இன்று இரவு நடைபெறவுள்ள கடைசி முன்னோடி கால் இறுதிகளாகும்.

சுவீடனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான போட்டி செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் கால் இறுதிக்குச் செல்வதற்கான ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் இதுவாகும். 

ஐக்கிய அமெரிக்காவில் 24 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் சுவீடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தது. அவ் வருடம் பல்கேரியாவை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடன் வெற்றிகொண்டிருந்தது. அதன் பின்னர் இம்முறை கால் இறுதி வாய்ப்பைப் பெற சுவீடன் முயற்சிக்கவுள்ளது.

சுவிட்சர்லாந்தைப் பொறுத்தமட்டில் 64 வருடங்களின் பின்னர் மீண்டும் கால் இறுதித் தகுதியைப் பெறும் எண்ணத்துடன் இன்றைய போட்டியில் சுவீடனை எதிர்கொள்ளவுள்ளது.

தனது சொந்த மண்ணில் 1954இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் கால் இறுதியில் ஆஸ்திரியாவிடம 5 க்கு 7 என்ற கோல்கள் கணக்கில் சுவிட்சர்லாந்து தோல்வி அடைந்திருந்தது.

எப். குழுவில் மெக்சிகோ, தென் கொரியா ஆகிய அணிகளை சுவீடன் வெற்றிகொண்டதுடன் 2014 உலக சம்பியன் ஜேர்மனியிடம் தோல்வி அடைந்திருந்தது.

ஜீ குழுவில் சேர்பியாவை சுவிட்சர்லாந்து வெற்றிகொண்டதுடன் பிரேஸில், கொஸ்டா ரிக்கா ஆகிய அணிகளுடனான போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் முக்கிய வீரர்களை தடைகள் காரணமாக (தலா இரண்டு மஞ்சள் அட்டைகள்) இழந்துள்ளன.

சுவீடன் அணியில் செபெஸ்டியன் லார்சன் தடைக்குள்ளாகியுள்ளதுடன் அணித் தலைவர் ஸ்டீவன் லிச்ஸ்டெய்னர், பேபியன் ஷேயர் ஆகியோரை சுவிட்சர்லாந்து இழந்துள்ளது.

இந்த இரண்டு அணிகளும் விளையாடிய 29 போட்டிகளில் 11 க்கு 10 என சுவிட்சர்லாந்து முன்னிலையில் இருக்கின்றது. ஆனால் உலகக் கிண்ணப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். 

(என்.வீ.ஏ.)

அணிகள் விபரம்

சுவீடன்: ரொபின் ஒல்சென், மைக்கல் லஸ்டிக், விக்டர் லிண்டெலொவ், அண்ட்ரெஸ் க்ரான்குவிஸ்ட் (அணித் தலைவர்), லுட்விக் ஒகஸ்டின்சன், விக்டென் க்ளேசன், கஸ்டவ் ஸ்வென்சன், அல்பின் எக்டால், எமில் போர்ஸ்பெக், மார்க்கஸ் பேர்க், ஒலா டொய்வொனென்.

சுவிட்சர்லாந்து: யான் சொமர், மைக்கல் லங், ஜொஹான் டிஜோரு, மெனுவல் அக்கஞ்சி, ரிக்கார்டோ ரொட்றிகூஸ், வெலொன் பெஹ்ராமி, க்ரான்ட் ஸாக்கா, ஸேர்டான் ஷக்ரி, ப்லேரிம் டிஸெமாலி, ஸ்டீவன் ஸூபர், ஜோசிப் டேர்மிக். (அணித் தலைவர் போட்டிக்கு முன்னர் நியமிக்கப்படுவார்)