வட அமெரிக்க வலய நாடான மெக்சிக்கோவை முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட தென் அமெரிக்க நாடான பிரேஸில், உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது

ரஸ்யாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இன்று ரஸ்யாவின் சமாரா எரினா விளையாட்டரங்கில் முன்னோடி கால் இறுதிப் போட்டியில்  (16 அணிகள் இரண்டாம் சுற்று நொக் அவுட்) பிரேஸில் மற்றும் மெக்சிக்கோ அணிகள் மோதின.

குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

.

சமாரா எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் மெக்சிகோவுக்கு எதிராக போடப்பட்ட இரண்டு கோல்களிலும் நேமாரின் பங்களிப்பு இருந்தது. 

வெற்றியைக் குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடிய இப் போட்டியில் பின்கள வீரர்களின் தடுத்தாடும் வியூகங்கள் கோல் போடுவதற்கு பெருந் தடையாக இருந்தது.

போட்டியின் முதல் 20 நிமிடங்களும் மெக்சிகோ வீரர்கள் பிரேஸில் வீரர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் அதன் பின்னர் பிரேஸில் வீரர்கள் தம்மை சுதாரித்தக்கொண்டு திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

போட்டியின் 51ஆவது நிமிடத்தில் மெக்சிகோ கோலை நோக்கி பந்தை நகர்த்திச் சென்ற நேமார் சாமர்த்தியமாக வில்லியனுக்கு பின்னோக்கி பரிமாறினார்.

பந்தைப் பெற்றுக்கொண்ட வில்லியன் போர்ஜெஸ் டி சில்வா எதிரணி கோலுக்கு வலப்புறத்திலிருந்து  உள்நோக்கி பந்தைப் பரிமாறினார். மெக்சிகோ வீரர் ஒருவரையும் கோல்காப்பாளரையும் கடந்துவந்த பந்தை நோக்கி ஓடிய நேமார் வலது காலை நீட்டி பந்தை கோலினுள் புகுத்தினார்.

இந்தக் கோலை அடுத்து மெக்சிகோ வீரர்கள் கடும் முயற்சியுடன் விளையாடி கோல் நிலையை சமப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடினர். சில சந்தர்ப்பங்களில் அவர்களது முயற்சிகள் எதிரணி வீரர்களால் அல்லது கோல்காப்பளரால் தடுக்கப்பட்டன.

போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் நுழைந்த ரொபர்ட்டோ பேர்மினோ அடுத்த இரண்டாவது நிமிடத்தில் நேமார் பரிமாறிய பந்தை கோலாக்கினார். 

பிரேஸிலின் இரண்டாவது கோலுடன் மெக்சிகோவின் எதிர்பார்ப்பும் வீண்போனது.

உலகக் கிண்ண வரலாற்றில் ஐந்தாவது தடவையாகவும் பிரேஸிலுக்கு எதிராக மெக்சிகோவால் கோல் போட முடியாமல் போனது.

அத்துடன் 88 வருட உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களைப் போட்ட நாடு என்ற பெருமைமை பிரேஸில் இன்று பெற்றுக்கொண்டது. 

இன்று போடப்பட்ட கோல்களுடன் உலகக் கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 227 கோல்களை பிரேஸில் போட்டுள்ளது.