(நா.தினுஷா) 

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்காக கல்விதுறையை இலக்காக்குவது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயமாகும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கல்களுக்கு இன்று கல்வித்துறையும் உள்வாங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையொன்றில் எதிர்வரும் 4 ஆம் தகதி சகல பாடசாலைகள் மூடப்படும் என்பதை தனது பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தனர். இதனை அரசியல் பழிவாங்கலாக கருதவேண்டும்.

ஊடக ஜனநாகத்தை மீறும் வகையிலேயே இந்த செய்தியினை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது. 42 இலட்சம் பாடசாலை மாணவர்களினதும் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் இந்த செய்தி அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும். 

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ஹிட்லரின் சில பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கின்றார் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தேன். இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே குறித்த ஊடகம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. 

எனவே தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்காக கல்விதுறையை இலக்காக்குவது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயமாகும். இவ்வாறான பழிவாங்கல்களுக்காக கல்விதுறையை உபயோகப்படுத்துவது நாட்டின் அனைத்து மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்றார்.