புதுடில்லியில் சடலமாக மீட்கப்பட்ட ஓரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கடவுள் நம்பிக்கை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களது வீட்டில் கிடைத்த டயறி மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதில் எழுதப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை  செய்தால் கடவுளை அடைய முடியும் என அவர்கள் நம்பியது தெரியவந்துள்ளது.

கையால் எழுதப்பட்ட சில விடயங்கள் எங்களிற்கு கிடைத்துள்ளன,அவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அந்த குடும்பத்தினர் வழமைக்கு மாறான ஆன்மீக அல்லது மாய நடவடிக்கைகளை பின்பற்றினர் என கருத முடிகின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சடலமாக மீட்கப்பட்ட விதத்திற்கும் டயரில் எழுதப்பட்டுள்ள விடயங்களிற்கும் இடையில் தொடர்புள்ளது என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் அவர்கள் டயரி எழுத ஆரம்பித்துள்ளனர்,இறுதியாக யூன் 26ம் திகதி அவர்கள் டயரி எழுதியுள்ளனர், கடவுளை சந்திப்பதற்கான நாளாக யூன் 30 திகதியை அவர்கள் தெரிவுசெய்துள்ளனர் எனினும் சனிக்கிழமை இரவு அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சடலமாக மீட்கப்பட்ட தேவி என்பவரின் மகள் இது கொலையென தெரிவித்துள்ளார்.இது திட்டமிட்ட கொலை என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத நம்பிக்கை கொண்டவர்கள்  அவர்கள் நாளொன்றிற்கு மூன்று தடவை பிரார்த்தனை செய்வார்கள் என தெரிவித்துள்ள அயலவர்கள் அவர்கள் திருமணமொன்றிற்காக தயாராகிவந்தனர் மகிழ்ச்சியாகயிருந்தனர் அவர்கள் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளனர்