இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே எனும் கிராமத்தில் குழந்தைகளை கடத்துவற்கு வருகை தந்துள்ளனர் என்ற வதந்தியின் காரணமாக ஐவரை தாக்கி கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மகாராஷ்டிரா, துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ரெயின்பாதாவிற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கிருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் அவர்களை கொடூரமாக தாக்கியதன் காரணமாக அவர்களுள் ஐந்து பேர் பரிதாபகரமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கையில், 

தாக்குதல் நடைபெற்ற பகுதியில் சில தினங்களாக குழந்தை கடத்தல்காரர்களின் நடமாட்டம் இருப்பதாக  வதந்தி பரவியுள்ளது. 

உயிரிழந்தவர்கள் தரப்பில் ஒருவர் குழந்தையிடம் பேச முயன்றதை வதந்தி காரணமாக தவறாக எண்ணி அங்கிருந்த பொதுமக்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 

எனவே மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.