புதுதில்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சட்டபேரவையில் பேசியதாவது,

‘உச்ச நீதிமன்றம் 15 ஆண்டுகள் வரை, காவிரி வழக்கு குறித்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியான தீர்ப்பை அளித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயற்பாடு குறித்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசில் எத்தனை பேர்; மாநில அரசில் எத்தனை பேர் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மேலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற விவரம் தெளிவாக பட்டியலிடப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய அரசு அந்த குழுவை நியமித்துவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டிற்கும் குழு அமைக்கப்பட்டு விட்டது. 

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்களாக யார், யாரை நியமிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள், தங்களுடைய பிரதிநிதிகளை முதலில் வழங்கியது. 

கர்நாடக அரசு வழங்கவில்லை. மத்திய அரசே, அந்த உறுப்பினர்களை நியமித்தது. உடனடியாக கர்நாடக அரசும் தங்களுடைய பிரதிநிதிகளை ஆணையத்திற்கும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் அமைத்தனர். 

இந்த இரண்டு குழுக்களும் செயற்பட ஆரம்பித்துவிட்டன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. 

அந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு இந்த குழுவின் வாயிலாக என்னென்ன அம்சங்கள் குறிப்பிட்டிருக்கிறதோ, அவை பேசி தீர்க்கப்படும். அதனால் தான், தமிழக அரசின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் எல்லோரையும் நான் அழைத்துப் பேசி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசித்திருக்கிறேன். 

அதுமட்டுமல்ல, அந்த ஆணையம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற விவரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. முதல் கூட்டம் குறித்த விவரம் தெரிந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதன் அடிப்படையில் தான் தமிழகத்திற்கு ஒவ்வொரு மாதமும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

ஆகவே, அந்தக் குழுக்கள் பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி எவ்வளவு தண்ணீர் தருகிறது என்பதை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இருக்கின்றனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு எவ்வாறு செயல்படுகிறது என்பதை எல்லாம் விவரம் தெரிந்த பிறகு, அனைத்துக் கட்சி கூட்டத்தை தேவை இருப்பின் கூட்டி அதற்கு தேவையான மேல் நடவடிக்கை எல்லாம் எடுப்போம்,’ என்றார்.

இதனிடையே காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் ஜுலை மாதம் 5 ஆம் திகதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.